திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.42 திருஆக்கூர்
பண் - சீகாமரம்
அக்கிருந்த ஆரமும் ஆடரவும் ஆமையுந்
தொக்கிருந்த மார்பினான் தோலுடையான் வெண்ணீற்றான்
புக்கிருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
1
நீரார வார்சடையான் நீறுடையான் ஏறடையான்
காரார்பூங் கொன்றையினான் காதலித்த தொல்கோயில்
கூராரல் வாய்நிறையக் கொண்டயலே கோட்டகத்திற்
தாராமல் காக்கூரில் தான்தோன்றி மாடமே.
2
வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் றன்மடந்தைத்
தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில்
வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்குந்
தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
3
கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப்
பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில்
அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
4
வீக்கினான் ஆடரவம் வீழ்ந்தழிந்தார் வெண்டலையென்
பாக்கினான் பலகலன்க ளாதரித்துப் பாகம்பெண்
ஆக்கினான் தொல்கோயில் ஆம்பலம்பூம் பொய்கைபுடைத்
தாக்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
5
பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான்
கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில்
விண்ணொளிசேர் மாமதியந் தீண்டியக்கால் வெண்மாடந்
தண்ணொளிசேர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
6
வீங்கினார் மும்மதிளும் வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்
தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
7
கன்னெடிய குன்றெடுத்தான் தோளடரக் காலூன்றி
இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல்கோயில்
பொன்னடிக்கே நாடோறும் பூவோடு நீர்சுமக்குந்
தன்னடியார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
8
நன்மையான் நாரணனும் நான்முகனுங் காண்பரிய
தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில்
இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்குந்
தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
9
நாமருவு புன்மை நவிற்றச் சமண்தேரர்
பூமருவு கொன்றையினான் புக்கமருந் தொல்கோயில்
சேன்மருவு பைங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளை
தாமருவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
10
ஆடல் அமர்ந்தானை ஆக்கூரில் தான்தோன்றி
மாடம் அமர்ந்தானை மாடஞ்சேர் தண்காழி
நாடற் கரியசீர் ஞானசம் பந்தன்சொல்
பாடலிவை வல்லார்க் கில்லையாம் பாவமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com